Sunday | March 22, 2026

ஒருபுறம், மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் ‘மகா வலி’; மறுபுறம், இலங்கை அரசாங்கத்தின் ‘மகா வலி’யையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.! – ரவிகரன் எம்.பி.

0 comments

ஒருபுறம் மத்திய கிழக்கு போரின் பொதுநெருக்கடியின் ”மகா வலி”யை எதிர்கொண்டவாறே மறுபுறம் அரசின் ”மகாவலி”யையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. டித்வா புயல் அனர்த்தம் நேர்ந்த பொழுது நாங்கள் எதிர்கொண்டது புயலை மட்டுமல்ல, புயலுக்குள்ளும் எங்கள் காணிகளை ஊடறுத்து வேலி போட்ட உங்கள் ”மகாவலி”யையும்தான் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21-03-2026) இரண்டாவது நாளாக நடைபெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்அங்கு மேலும் உரையாற்றுகையில்,

உலகமெங்கும் நெருக்கடிநிலை நிலவும் சமகாலத்தில் எம்முன்னுள்ள முதற்கேள்விதான், இவ் அரசாங்கம், இந் நெருக்கடிநிலையை நிலைகுலையாது கையாள்கிறதா? இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

உலகளாவிய பொது நெருக்கடி நிலைக்கு, கொள்கை நிலையிலான திடமான முடிவை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கின்ற போது நிகழ்வுகளுக்கான எதிர்வினையை மட்டுமே தான் அடுக்கடுக்காக ஆற்றுகின்றதோ என்றே என கேட்கத்தோன்றுகிறது.

முடிவெடுப்பதில் அடிக்கடி ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், ஒரு முறையான நீண்டகாலத் திட்டம் அரசிடம் இல்லையோ என எண்ணத்தோன்றுகிறது. பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து கட்டமைக்கப்பட்ட தீர்வுகளை தயாரிப்பதற்கு பதிலாக, அரசாங்கம் ஒரு தற்காலிக நடவடிக்கையிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டிருப்பதாகவே எமக்கு புலப்படுகிறது.

எரிபொருளுக்கான நெடுவரிசைகளும் பதுக்கல்களும் கடந்த மாதத்தின் கடைசி நாளிலேயே தொடங்கிவிட்டது. இரண்டு கிழமைகள் கடந்தே கியூ ஆர் முறைமை கொண்டுவரப்படுகிறது. ஒன்றரை மாதத்திற்குரிய எரிபொருள் முதல் 10 நாள்களுக்குள் தீர்ந்துவிட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.

இப்படியான சடுதியான கேள்வி அதிகரிப்பை கட்டுப்படுத்த தவறியது யார்?இப்போது நிகழ்ந்த பதுக்கல்களுக்கு பொறுப்பேற்பது யார்?ஓர் அரசாக, நீங்கள் தானே? உலகளாவிய நிகழ்தகவுகளை முன்கூட்டியே கணித்து, ஏற்படவல்ல தாக்கங்களை முன்கூட்டியே கருதி, பல படிகளில் சோதித்து, முறைப்படி நடைமுறைப்படுத்துவதையே ஓர் அரசாக நீங்கள் செய்திருக்கவேண்டியது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் முறைமையை காலத்துக்கேற்ப இற்றைப்படுத்தாமையே சமகால வாரத்தின் சறுக்கல்களாகின்றன.

ஒவ்வொரு பிரச்சினை வருகின்ற போதும் அதற்குரிய தீர்வைக் கண்டு முறைமையை இற்றைப்படுத்துவதென்பது வெள்ளம் வர வர தற்காலிக அடைப்புகளை இடுவதுக்கு ஒப்பாகிறது.வெள்ளம் வருமுன்பாகவே அணை கட்டுவதே ஓர் அரசுக்கு அணி.

ஒரு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் மீண்டும் மாற்றியமைக்கப்படுவது என்பது திட்டமிடல், சோதனை செய்தல், மற்றும் களநிலையை புரிந்துகொள்வதில் ஏற்படும் தோல்வியையே பிரதிபலிக்கிறது.

பொதுநெருக்கடி நிலையை எதிர்கொள்ள தற்பொழுது அரசாங்கம் முன்வைத்துள்ள புதன்கிழமை சிக்கன விடுமுறை தாங்கள் எதிர்பார்த்த அளவிலான பெறுபேற்றைத் தந்துள்ளதா? என கேட்கிறேன்.

கிட்டத்தட்ட 20வீத மனித மூலதனத்தை குறித்த நாளில் இழந்து நாம் சேமித்தது என்ன? கடந்த செவ்வாய்க்கிழமையோடு ஒப்பிடுகையில் புதன் கிழமையில்,மொத்த மின்சக்தி 1.17 ஜிகாவாட் மணிக்கு குறைந்துள்ளது. அதாவது 2வீத குறைவு.பகல்நேர உச்ச தேவை 113.6 மெகா வாட் (3.9வீதகுறைவு) எரியெண்ணெய் பயன்பாடு 0.32ஜிகாேவாட் மணிக்கு குறைந்துள்ளது. அதாவது 2.1வீதம். ஒரு கிழமைக்குரிய 20வீத மனித உழைப்பை ஒரு நாளில் இழந்து 2வீத அளவான எரியெண்ணெயை (தேமல் ஒயில்) மிச்சப்படுத்துவது இலாபகரமானதா? என கேட்கிறேன்.

மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, ஒருபுறம் இந்தப் பொதுநெருக்கடியின் மகா வலியை எதிர்கொண்டவாறே மறுபுறம் அரசின் மகாவலியையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

டித்வா புயல் அனர்த்தம் நேர்ந்த பொழுது நாங்கள் எதிர்கொண்டது புயலை மட்டுமல்ல, புயலுக்குள்ளும் எங்கள் காணிகளை ஊடறுத்து வேலி போட்ட உங்கள் மகாவலியையும் தான். இப்போது நெடுவரிசைகளிலும் பதுக்கல்களிலும் நாங்கள் எதிர்கொள்வதும் மத்தியகிழக்கின் அதிர்வுகளை மட்டுமல்ல! மாறாக கொக்குத்தொடுவாய் மத்தியில் அடாத்தாக உப்பளம் அமைக்கவிட்ட உங்கள் மகாவலியையும் தான்.

கால்கடுக்க காத்திருந்து எரிபொருள் வாங்கி கடலுக்குச் சென்றாலும் என்ன பயன்?அங்கு நீங்கள் கட்டுப்படுத்த தவறிய சட்டவிரோத தொழில்கள் ஒருபுறம். இறைமை தொலைந்த வடகடலில் உலவும் இந்திய இழுவைப்படகுகள் மறுபுறம் வெறும் படகோடு கரைக்கு மீள்வது தான் உங்கள் அரசு எங்கள் மீனவர்களுக்கு இதுவரை வழங்கியுள்ள நீதி என்றார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00