செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து தொழில்நுட்ப உதவி, தடயவியல் நிபுணத்துவம் அல்லது டி.என்.ஏ பகுப்பாய்வு ஆதரவை அரசாங்கம் கோரியுள்ளதா?

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி வழக்கைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட செம்மணி விசாரணைகளுடன் தொடர்புடைய சான்றுகள் மற்றும் பொருட்களை மீளாய்வு செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நீதி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25-06-2026) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்பொழுது பொதுமக்களிடையே பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ள ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் விசாரணைகளின்போது, மோதல்களின்போது காணாமல் போன பொதுமக்கள் செம்மணிப் பகுதியில் புதைக்கப்பட்டதாக வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தொடர்ந்தே இப்பகுதி முதன்முதலில் பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது.
அண்மைகால அகழ்வாராய்ச்சிகளின் போது 380க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியாக செம்மணியை மாற்றியுள்ளது. இந்த கண்டுபிடிப்புகளின் அளவானது, பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணுதல், தடயவியல் விசாரணைகள், பொறுப்புக்கூறல் மற்றும் உண்மைகளைக் கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
சமீபத்திய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின்படி செம்மணி அகழ்வாராய்ச்சி இடத்தில் அடையாளப்படுத்தப்பட்ட மொத்த மனித எலும்புக்கூட்டு எச்சங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளில், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் முழுமையான எலும்புக்கூடுகள் மற்றும் பகுதி அளவிலான எலும்புக்கூட்டு எச்சங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான விபரங்களை அரசாங்கத்தால் வழங்க முடியுமா?
அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளில் எத்தனை தடயவியல் பரிசோதனை, டி.என்.ஏ பகுப்பாய்வு அல்லது பிற அறிவியல் ரீதியான அடையாளங்காணல் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவற்றில் எத்தனை நேர்மறையாக அடையாளம் காணப்பட்டுள்ளன? பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம், மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் நிகழ்ந்த தோராயமான காலகட்டம் ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து தொழில்நுட்ப உதவி, தடயவியல் நிபுணத்துவம் அல்லது டி.என்.ஏ பகுப்பாய்வு ஆதரவை அரசாங்கம் கோரியுள்ளதா?
படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி வழக்கைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட செம்மணி விசாரணைகளுடன் தொடர்புடைய சான்றுகள் மற்றும் பொருட்களை மீளாய்வு செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்து அல்லது வெளிநாடுகளுக்கு முன்னதாக அனுப்பப்பட்ட எலும்புக்கூடுகள் மாதிரிகள் அல்லது தடயவியல் அறிக்கைகள் அடங்குமா, மற்றும் அவற்றின் தற்போதைய நிலை என்ன?
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மன்றக் கூட்டத்தில், அடையாளப்படுத்தப்பட்ட மனித எலும்புக் கூடுகளை அடையாளம் காணும் அடுத்த கட்டத்திற்கு விசாரணையை நகர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் உதவி பெறுவதற்காக, சிறந்த மற்றும் சர்வதேச அனுபவமிக்க தடயவியல் நிறுவனம் ஒன்று ஈடுபடுத்தப்படும் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதியளிப்பாரா, செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதில்களை வழங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள மேலதிக நடவடிக்கைகள் யாவை என கேட்டுள்ளார்.