பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு ஒன்றரை வருடகாலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். மனித உரிமைகளை பாதுகாப்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.
அதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25-06-2026) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பாரபட்சமின்றிய வகையில் கைதுகள் இடம்பெறுகின்றன. அதேபோல் பாதாளக் குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். பாதாளக் குழு உறுப்பினரான ஹரக்கட்டாவுடன் தொடர்புக் கொண்டு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் நீதியமைச்சரின் மகனும், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரான சரித் அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் போதைப்பொருளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடுகிறார். சிங்கப்பூர் நாட்டின் மரண தண்டனை சட்டத்தை இங்கு அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார். போதைப்பொருள் குற்றவாளியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சரித் அபேசிங்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை எதிர்க்கட்சி குறிப்பிட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்புகிறார். 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எத்தனை அரசாங்கங்களில் பதவி வகித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு ஏதேனும் யோசனைகளாவது முன்வைத்துள்ளாரா, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு ஒன்றரை வருடகாலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.
மனித உரிமைகளை பாதுகாப்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும்.
நீதியரசர்கள் நியமனம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். கடந்த காலத்தில் நீதி அமைச்சரும் ஜனாதிபதியும் இணைந்தே, தமக்குத் தேவையானவர்களை நியமித்துக் கொண்டனர். தற்போது நாம் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையிலான நியமனங்களை வழங்கும் சுதந்திரத்தை பிரதம நீதியரசருக்கு வழங்கியுள்ளோம். கீழ் நீதிமன்றங்களில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கு தகுதியின் அடிப்படையில் நியமிப்பதே தற்போது நடைபெறுகிறது. ஒரு முழுமையான கட்டமைப்பாகக் கருதி இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
முன்னர் உயர் நீதிமன்றம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வழக்குகளை விசாரித்தது. தற்போது ஐந்து நாட்களும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கொள்கலன் சம்பவம் குறித்துப் பேசினார்கள். அவர்களே ஒரு பொயைக் கூறிவிட்டு, இப்போது அவர்களே அதில் சிக்கியுள்ளனர் என்பதுதான் உண்மை. இதைவிடப் பொறுப்புக்கூறும், இதைவிடப் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் ஒரு அரசாங்கம் இருந்ததில்லை. நாம் சட்டத்தின் மற்றும் நீதியின் கோட்பாடுகளுக்கு இணங்கவே செயற்படுகிறோம்.
2025 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளில், சுமார் 23,692 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயின் கைப்பற்றப்படுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்நாட்டில் நடக்கும் அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் பின்னால் ஒரு கடத்தல் வலையமைப்பு உள்ளது. கோட் – சூட் அணியும் சட்டத்தரணிகளும் இவர்களில் அடங்குவர் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
கடந்த 24 மாதங்களில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் தங்கியிருந்து செயற்படும் இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 95 பேருக்கு எதிராக ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. தனது குழுவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவரால் முடியுமா? சரித் அபேசிங்கவிற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்று நாம் பார்ப்போம் என்றார்.