
இன்று திங்கட்கிழமை (24.11.2025) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.330,000
1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.303,600
📩 Contact Us For questions about refunds or returns, reach out to our support team: Email: amizhthu.com@gmail.com Dismiss
கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை (24.11.2025) அனுப்பியுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில்,
இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?
புதைகுழிகள் தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னென்ன?
போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வரும் கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கூட்டு மனித புதைக்குழி தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு மக்கள் போராட்ட முன்னணி பதில்களை எதிர்பார்க்கிறது.
இது தொடர்பாக தடயவியல் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை?
குற்றவியல் அரசுகளின் அழிக்க முடியாத கரும்புள்ளிகளாகக் கருதப்படும் பல பாரிய மனிதப புதைகுழிகள் இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவற்றில் எதிலும் குறைந்தபட்ச நீதி அல்லது உரிய செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக முந்தைய அரசாங்கங்கள் அந்த செயல்முறைகளை வேண்டுமென்றே புறக்கணித்து தாமதப்படுத்தியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
அந்த விசாரணைகள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்று பாரபட்சமின்றி முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு / குறைந்தபட்சம் அவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த செயல்முறை முடிவடைய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தாமதமாகி வரும் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை தாமதமின்றி முடிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தால் அவர்கள் மீது விரைவில் வழக்குத் தொடரவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மாதம்பிட்டிய தொடர்மாடிக் குடியிருப்பில் 1 கிலோ கிராமுக்கு அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீஜயசெவன தொடர் மாடிக்குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை (22.11.2025) மாதம்பிட்டி பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 310 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் 28 வயதுடைய கொழும்பு 15 பகுதியை சேர்ந்தவராவார். சந்தேகநபர் தொடர்பில் மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அரசியலமைப்பின் 13’வது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை.

மாகாண சபைகளுக்காக அதிகார வழங்கலை தொடர்ந்து புறக்கணித்து மத்திய அரசாங்கம் சிறந்தது என்ற நிலைப்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22.11.2025) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நேரடி விளைவாகஇ அரசியலமைப்பு ரீதியாக கட்டளையிடப்பட்ட நிர்வாகப் பிரதிநிதித்துவத்திற்கான வரையறுக்கப்பட்ட கட்டமைப்பாக நாங்கள் அதை கண்டிப்பாகக் கருதுகிறோம். அங்கு இந்தியா பின்னர் ஓரங்கட்டப்பட்டது மற்றும் தமிழர் உரிமைகளுக்கான விதிகள் முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டன.
மாகாண சுகாதார அதிகாரசபையின் முறையான குறைமதிப்பிற்கு உட்படுத்தல் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதித்துவத்திலிருந்து பின்வாங்குதல் இலங்கையில் தமிழர்கள் மீதான அரசியலமைப்பற்ற ஒடுக்குமுறையாகும். இந்த வரையறுக்கப்பட்ட பொறிமுறையின் உள்ளேயும் கூட, மத்திய அரசு ஒருதலைப்பட்ச துணை அரசியலமைப்பு நடவடிக்கைகள் மூலம் மாகாணங்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்களை தொடர்ந்து திரும்பப் பெற்றுள்ளது.
சட்டங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கைகள், அரச சுற்றறிக்கைகள் மற்றும் அமைச்சரவை முடிவுகள்,நிர்வாக முறையற்ற செயற்பாடுகள் மூலம் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டது. தற்போதைய சுகாதாரத் துறை நெருக்கடி இந்த உத்தியை எடுத்துக்காட்டுகிறது. ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களைத் திரும்பப் பெறுவது என்ற இரட்டை நோக்கத்துடன் அதிகாரத்தை சமீபத்தியதாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட அரசியல் திட்டம்மாகும்.
அதே நேரத்தில் தோல்வியின் சுய நிறைவேற்றும் தீர்க்கதரிசனத்தை உருவாக்கியது. மத்திய அரசு நிர்வாகச் சரிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாகாணங்களுக்கான அதிகாரங்களை முழுமையாக விடுவிப்பதை தடுக்கும் போது, மாகாண நிர்வாக முறைமை தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்து மத்திய அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தும் நிலை ஏற்படும். இது தமிழ் மக்களுக்கு மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போதைய கட்டமைப்பிற்குள், சுகாதாரம் என்பது ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயமாகும். மருத்துவமனைகளில் மூன்று நிறுவன வகைகளை மட்டுமே நிர்வகிக்க சுகாதார அமைச்சகம் அரசியலமைப்பு ரீதியாக தேசிய மருத்துவமனைகள்,போதனா மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன.
இலங்கையின் மாவட்ட பொது மருத்துவமனைகள் உட்பட மற்ற அனைத்து மருத்துவமனைகளும்,அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபை அதிகாரத்தின் கீழ் வருகின்றன. எந்தவொரு வரி அமைச்சக கையகப்படுத்தலும் அரசியலமைப்பு பாதையைப் பின்பற்ற வேண்டும். அவை மூன்று கட்டாய வகைகளில் ஒன்றிற்கு சட்டப்பூர்வமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
28 பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் 21 கட்டாய சட்ட மேம்படுத்தல் இல்லாமல் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத இணைப்பு ஏராளமான அடிப்படை மருத்துவமனைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.பல மருத்துவமனைகள் மாகாண நிர்வாகங்களால் முறையான மாகாண சபையின் ஒப்புதல் இல்லாமல் ஒப்படைக்கப்பட்டன. இது ஜனநாயக நிறுவனங்களையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
வடக்கு மாகாண பொது சுகாதார அதிகாரசபையின் நான்கு பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் (யாழ்ப்பாணம், வவுனியா,மன்னார், கிளிநொச்சி) உட்பட ஏழு பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் மட்டுமே உரிமையுள்ள மாகாண அதிகாரிகளிடம் உள்ளன. இப்போது மாகாண சுகாதார அதிகாரசபையின் இறுதி கோட்டைகள் மற்றும் குறிப்பிட்ட கையகப்படுத்தல் இலக்குகள்.
தற்போதைய நிலையில் பொது சுகாதார அமைச்சின் பிரச்சாரம் தீவிரமாகத் தொடர்கிறது. முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கீழ் முந்தைய முயற்சி, அநீதியை அங்கீகரிக்கும் கொள்கை ரீதியான தெற்கு குரல்களால் ஆதரிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் எதிர்ப்பால் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
மாகாண நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. குறைந்து வரும் சேவைகளால் விரக்தியடைந்த வடக்கு ஊழியர்களும் பொதுமக்களும் மருத்துவமனை ஒப்படைப்பு மட்டுமே சட்டபூர்வமான வளங்களுக்கான ஒரே வழி என்ற தவறான கதையை நம்பத் தொடங்குகிறார்கள். இந்த திட்டமிடப்பட்ட விரக்தியை இரு தரப்பிலும் ஏற்படுத்துகிறது.
சுகாதார சேவையை பொறுத்தவரையில் வடக்கு மாகாணத்துக்கு குறைவான அளவில் தான் நிதி ஒதுக்கப்படுகிறது.அத்துடன் அங்குள்ள வைத்தியசாலைகளிலும் மனித மற்றும் பௌதீக வளங்கள் குறைவாகவே காணப்படுகிறது. வளங்கள் முறையாக பகிர்ந்தளிக்கப்படாத போதுமான முரண்பாடுகள் தோற்றம் பெறும். கடந்த காலங்களிலும் அவ்வானறான தன்மையே காணப்பட்டது என்றார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13,14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு பற்றி சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, புத்தசாசன அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பிலான அறிக்கையொன்று ஜனாதிபதி உட்பட சிறுபான்மை பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் அதிகமாக ஆங்கில மொழியிலேயே விவரிப்புக்கள் காணப்பட்டிருந்தன. இதனை அவதானித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சொற்ப நேரத்திலேயே அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாகவே சுட்டிக்காட்டி குறித்த விடயங்கள் ஏன் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அதிகாரிகள் ஆங்கில மொழியில் நாங்கள் அளிக்கையை தயாரித்துள்ளதாக பதிலளித்தபோது, கட்டாயமாக தமிழ் மொழியில் விடயங்களை விவரிக்கும் வகையில் தயாரிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து கலந்துரையாடல் ஆரம்பித்தபோது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த அறிக்கையில் தமிழ் மொழி குறைவாக காணப்படுவது தொடர்பில் தான் கேள்வி எழுப்பவிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார அதனை அவதானித்து வெளிப்படுத்திய கரிசனைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டுமொருமுறை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும், அனுமதி கிட்டும் பட்சத்தில் எதிர்வரும் 26 ஆம் அல்லது 27 ஆம் திகதி இச்சந்திப்பு இடம் பெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஊடாக 09.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இழைத்த குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்படல்க்ள, மனிதப்புதைகுழிகள் மற்றும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட சகல உண்மைகளையும் வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சத்தியக்கடதாசி வழங்குவதற்கும் அவர் இணங்கியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய சில உண்மைகளையும், எதிர்வருங்காலங்களில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக உள்ள விடயங்களையும் உள்ளடக்கி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்ஷ தனது சட்டத்தரணி முன்னிலையில் சத்தியக்கடதாசி வழங்கியிருந்தார்.
அந்த சத்தியக்கடதாசியின் ஒரு பிரதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் மேலும் இரு பிரதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடமும், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடமும் கையளிக்கப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்தவிடம் இம்மாதத் தொடக்கத்தில் வினவியபோது, மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாகவும், இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் (நடைபெற்றுமுடிந்த) தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டுத் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்றுமுடிந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இச்சத்தியக்கடதாசி தொடர்பான விடயம் ஆராயப்படவில்லை எனவும், கடந்த ஒகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் அதுபற்றிய முழுமையான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னரே இவ்விவகாரம் ஆராயப்படும் எனவும் அலுவலக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
அதுமாத்திரமன்றி அலுவலக அதிகாரிகள் மீண்டுமொரு முறை சோமரத்ன ராஜபக்ஷவைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும், அனுமதி கிட்டும் பட்சத்தில் எதிர்வரும் 26 ஆம் அல்லது 27 ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில், கத்தோலிக்க திருச்சபை 3 பிரதான காரணிகளை வலியுறுத்தியுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை விரைவில் மக்கள் மயப்படுத்தப்படும் என்றும், அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கான குழுவின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுக்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
ஜனாதிபதியிடம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த கோரிக்கைக்கமையவே அந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. நீதி அமைச்சர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், மத விவகார அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் உட்பட விசாரணைகளுடன் தொடர்புடைய உயர்மட்டத்தினரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
இதன் போது 3 பிரதான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள், வழக்குகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் உள்ளிட்டவை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பது முதன்மை காரணியாக அமைந்திருந்தது.
அதற்கமைய ஓரிரு வாரங்களுக்குள் இதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு விரைவில் குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையாவது நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றோம்.
இரண்டாவது காரணி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். அது மாத்திரமின்றி அந்த அறிக்கை மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றோம்.
குறிப்பிடவொரு காலப்பகுதிக்குள் விசாரணைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தமையால், வெளிநாடுகளிலுள்ளவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே அந்த அறிக்கையை முறையாக மதிப்பாய்வு செய்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது அடுத்த பிரதான காரணியாகும். விரைவில் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இம்மூன்று காரணிகள் தொடர்பில் நாம் ஓரளவுக்கு வெற்றிகரமான பதில்களைப் பெற்றுள்ளோம். மேலும் சிங்கள மற்றும் தமிழ் அடிப்படைவாத குழுக்கள் சில தடை செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் சில முஸ்லிம் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் சில அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் மத மற்றும் இன அடிப்படைவாத குழுக்கள் நேரடியாகத் தாக்கம் செலுத்துகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளடங்களாக மேலும் பல சந்தர்ப்பங்களில் இவை அடிப்படை காரணிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
இந்த அடிப்படைவாத குழுக்கள் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும். நாட்டில் மீண்டும் இதுபோன்றதொரு சமூகக்கொலை இடம்பெற இடமளிக்க முடியாது. அடிப்படைவாதங்களால் நாட்டை பலவீனப்படுத்த மீண்டுமொருமுறை இடமளித்து விடக் கூடாது என்றார்.
முன்னுரை
போருக்குப் பிந்தைய ஈழத் தமிழ்த் தாயகப் பரப்பில், தமிழரின் நில உரிமை, மொழி உரிமை மற்றும் அரசியல் இறையாண்மை ஆகியவை திட்டமிட்டு சிதைக்கப்படும் செயல்பாடுகள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச் செயல்பாடுகளில் மிக ஆபத்தானதும் நீண்டகால விளைவுகளைக் கொண்டதுமான ஒன்று, சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட நில அபகரிப்பு முயற்சிகளாகும்.

கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிரான் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம், இந்த ஆக்கிரமிப்பு அரசியலுக்கு எதிராக ஒரு தமிழ்த் தேசிய உள்ளூராட்சி அமைப்பு வெளிப்படுத்திய சட்டபூர்வமானதும், துணிச்சலானதும், வரலாற்றுப் பொருள்படைத்த எதிர்ப்பாக அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண நிர்வாக முடிவு அல்ல; தமிழர் தாயகத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பின் ஆழ்ந்த அரசியல் வடிவத்தை வெளிக்கொணர்ந்த முக்கிய நிகழ்வாகும்.
உள்ளூராட்சி அதிகாரத்தின் மீது திணிக்கப்பட்ட சிங்களப் பேரினவாத ஆதிக்கம்
ஒரு ஜனநாயக ஆட்சி முறையில், மத்திய அரசின் திணைக்களங்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுத் தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை நியதி. இலங்கையின் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம், ஒரு பிரதேச சபையின் எல்லைக்குள் ஒரு கல்லை நாட்டுவதற்கும் கூட அந்தச் சபையின் ஒப்புதல் கட்டாயம் என்பதை தெளிவாக வரையறுக்கிறது.
ஆனால், கோறளைப்பற்று பிரதேச சபையின் எவ்வித அனுமதியையும் பெறாமல், சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் கிரான் பகுதியில் பலகைகளை நாட்டியமை, சட்டத்தை அப்பட்டமாக மீறியதோடு, உள்ளூராட்சி அதிகாரத்தை அவமதிக்கும் சிங்கள ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிரதேச சபைத் தவிசாளரின் தலைமையில் உறுப்பினர்களும் ஊழியர்களும் இணைந்து அந்தப் பலகைகளை அகற்றிய நடவடிக்கை, தமிழ்த் தேசிய உள்ளூராட்சி நிர்வாகம் தனது அதிகாரத்தை நிலைநாட்டிய ஒரு வீரமிகு ஜனநாயக மறுப்பாகும். இது சட்ட மீறலுக்கு எதிரான பதிலடி மட்டுமல்ல; வரலாற்று நீதியைப் பாதுகாக்கும் தாய்நிலக் காப்புறுதியாகும்.
தொல்லியல் என்ற போர்வையில் நில அபகரிப்பு: சிங்கள மயமாக்கலின் கொந்தளிப்பான அரசியல்
“தொல்லியல்” எனும் சொல்லை முன்வைத்து, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை சிங்கள பௌத்த அடையாளத்துக்குள் திணிப்பது, நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு அரசியல் உத்தியாகும். ஒருமுறை ஒரு பகுதி தொல்லியல் இடமாக அறிவிக்கப்பட்டால், அது மக்களின் நேரடி கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு, அரசின் முழு உரிமைக்குள் கொண்டு வரப்படுகிறது. அதன் பின்னர் அங்கு புத்த விகாரைகள், சிங்கள குடியேற்றங்கள், பாதுகாப்பு நிலையங்கள் போன்றவை உருவாக்கப்பட்டு நிலத்தின் இனக்கற்றை மாற்றம் நிகழ்த்தப்படுகிறது.
கிரான் சம்பவமும் இதே சூழ்ச்சியின் இன்னொரு கட்டமாக மக்கள் உணர்கிறார்கள். தங்களின் விவசாய நிலங்கள், வாழ்வாதாரப் பரப்புகள் பறிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் முறையிட்டதன் அடிப்படையிலேயே பிரதேச சபைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அனுபவத்தின் வழி உருவான அரசியல் விழிப்புணர்வின் பிரதிபலிப்பாகும்.
இன அழிப்பு போக்கின் ஒரு கூறாக நில அபகரிப்பு இடம்பெறுவதால், இது வெறும் நிர்வாகத் தவறு அல்ல; தமிழ்த் தேசிய இருப்பை முறியடிக்கும் திட்டமிட்ட சிங்களப் பேரினவாதச் செயற்பாடாகும்.
மொழிப் புறக்கணிப்பும் இனஅநீதியும்: தமிழின் மீதான திட்டமிட்ட அவமதிப்பு
கிரான் பகுதியில் நிறுவப்பட்ட பலகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, முதன்மை இடத்தில் சிங்கள மொழி முன்னிறுத்தப்பட்டமை, மொழியுரிமை மீறலின் வெளிப்பாடாகும். பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் தமிழுக்கு இரண்டாம் நிலை கூட வழங்கப்படாதது, ஒரு இனத்தின் மொழி, பண்பு, அடையாளம் ஆகிய அனைத்தையும் திட்டமிட்டு ஒதுக்கும் நடவடிக்கையாகும்.
மொழி என்பது ஒரு சமூகத்தின் ஆன்மா. அதை நிராகரிப்பது, அந்த சமூகத்தின் வரலாற்றையும் தொடர்ச்சியையும் சிதைக்கும் முயற்சியாகும். இது நிர்வாக நடைமுறைகளின் வழியாக முன்னெடுக்கப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனஅசமத்துவ அரசியலாகும்.
சட்டம், அதிகாரம், மக்கள்பலம்: தமிழ்த் தேசிய எதிர்ப்பின் புதிய கட்டம்
கிரான் பிரதேச சபையின் நடவடிக்கை, சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு உரிமை நிலைநாட்டல் முயற்சியாகும். இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல; தமிழ்த் தாயகத்தின் எல்லா பகுதிகளிலும் நிகழும் ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கான எச்சரிக்கை மணியாகும்.
மத்திய அரசின் திணைக்களங்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, உள்ளூர் நிர்வாகங்களை ஒடுக்கும் போக்கு தொடருமானால், தமிழ்த் தேசிய அரசியல் ஒருமைப்பாட்டின் வழியாக எதிர்ப்புச் சக்தி மேலும் வலுப்பெறும் என்பது தவிர்க்க முடியாதது.
முடிவுரை
கிரான் பிரதேச சபையின் வீரமிகு நிலைப்பாடு, சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் அத்துமீறல்களுக்கு எதிரான ஒரு தெளிவான தமிழ்த் தேசிய பதிலாகும். இது சட்டத்தால் வழிநடத்தப்படும் ஜனநாயகமான போராட்டமாகவும், தாயக உரிமையை உறுதிப்படுத்தும் முக்கிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.
ஆட்சிகள் மாறினாலும், தமிழர் மீதான அநீதியும் நில அபகரிப்பும் தொடர்கின்ற நிலையில், சட்டமும் மக்கள்பலமும் ஒன்றிணைந்த தொடர்ச்சியான எதிர்ப்பே தமிழ்த் தாயகத்தின் இருப்பை காக்கும் ஒரே வழியாகும்.
தமிழ்த் தேசியத்தின் நில உரிமை, மொழி உரிமை, பண்பாட்டு இறையாண்மை ஆகியவற்றை பாதுகாக்கும் போராட்டத்தில், கிரான் சம்பவம் ஒரு வரலாற்றுச் சாட்சி. இது எதிர்காலத் தலைமுறைகளுக்கான விழிப்புணர்வின் விதையாக மாற வேண்டிய கட்டாய அரசியல் தருணமாகும்.

╭──────────────────────╮
எழுதியவர் ஈழத்து நிலவன்
╰──────────────────────╯
23/11/2025
மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், நேற்று (22.11.2025) பிற்பகல் பமுனுகம மற்றும் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட கடலோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் 04 படகுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பமுனுகம பொலிஸார் 1500 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், துங்கல்பிட்டிய பொலிஸாரால் சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனை நடவடிக்கைகளின்போது பல சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் துங்கல்பிட்டிய மற்றும் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டுமெனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் சனிக்கிழமை (22.11.2025) இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில், பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் வெளியிடுகையில்,
கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகநிறுவனங்கள் மீதான தாக்குதல் நடத்தியமைக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படவேண்டும்.
இந்த நாட்டில் ஊடகங்களின் சுதந்திரமும், சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“நீர்வளத்தால் செழிப்பான எதிர்காலம்” எனும் தலைப்பில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அக்குவா பிளானட் ஸ்ரீ லங்கா – 2025” கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சார்ந்த உற்பத்திகள், நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், நீரியல் தாவரங்கள், அலங்கார மீன் வகைகள் உட்பட மீன்பிடித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடைபெறும் அக்குவா பிளானட் 2025 சர்வதேசக் கண்காட்சி இன்று, நவம்பர் 21 முதல் 23ஆம் திகதி வரை தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஆரம்ப விழாவை முன்னிட்டு, மீனவ சமூகத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஓய்வூதிய உரிமைப் பத்திரங்கள் பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டது. அக்குவா பிளானட் 2025ஐ அடையாளப்படுத்தும் வகையில் முதலாம் நாள் தபால் உறை, ஞாபகார்த்த முத்திரை ஆகியனவும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
இவ்விழாவில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன.
நீருயிர்கள், நீர்த் தாவரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தித் துறையில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும்.
எமது அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப, நாம் எதிர்பார்த்தபடி இலங்கையை மீன்பிடித் துறையின் உலக ஏற்றுமதி மையமாக (Global Export Hub) மாற்ற வேண்டும் என்ற இலக்கை யதார்த்தமாக்கும் ஒரு படியாகவே அக்குவா பிளானட் ஸ்ரீ லங்கா – 2025 சர்வதேசக் கண்காட்சியை நான் பார்க்கின்றேன்.
நாட்டின் தேசியப் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கினையும் வகிக்கும் அதே வேளை, நமது நாட்டின் பெருமளவு மக்களின் பிரதான வாழ்வாதாரமாகவும் மீன்பிடித் தொழில் இருந்து வருகின்றது. ஆகையினால் நீரின வளர்ப்பு மற்றும் உள்ளக மீன்பிடித் தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும். உயிரினங்கள் மற்றும் நீர்த் தாவரங்கள், மதிப்புச் சேர்க்கப்பட்ட கடலுணவுப் பொருட்கள் ஆகிய உற்பத்தித் துறைகளில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு, விஞ்ஞான ரீதியிலான (Science-Based) வள முகாமைத்துவம், பொதியிடல், சூழல்நல மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் நவீன நீரின வளர்ப்பு பற்றிய அறிவையும், தொழில்நுட்பத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றுத்தர அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கிறோம் என்பதை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக, மதிப்புச் சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கான ஒரு செயற்றிட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்துடன், மீன்பிடித் தொழிலுடன் சம்பந்தப்பட்ட கிராமியச் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினைக் கற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நாட்களில் பிரதான பேசுபொருளாக இருப்பது எமது அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
2026 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மீன்பிடித் துறையின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருக்கின்றது. எமது மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகளைத் தயாரிப்பதற்காக இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
துறைமுக உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் 500 மில்லியன் ரூபாயை நாம் ஒதுக்கி இருக்கின்றோம். அத்தோடு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்காக 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான உயிர்காப்பு உபகரணங்கள் வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபாய் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்ட மீன்பிடிப் பிரதேச கண்காணிப்பு முறைமைக்காக (Satellite-Based Fish-Ground Tracking Systems) 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அத்தோடு நீரினப் பண்ணை அபிவிருத்தி நிலையங்களை உருவாக்குதல், மீனவ சமூகத்தின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மீன்பிடித் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றுக்காகவும் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கூற விரும்புகிறேன்.
இறுதியாக, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க நாம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்குப் பங்களிக்குமாறு மீன்பிடித் துறை சார்ந்த உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் எனப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்,
வீழ்ச்சியடைந்திருந்த மீன்பிடித் தொழிலை மீட்டெடுப்பதற்கான பாரிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கண்காட்சி திட்டமிடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கண்காட்சியின் பிரதான நோக்கம், நமது நாட்டின் கடல் வளங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கடல் வளத்தை மேம்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அதன் பயன்களைப் பெற்றுக் கொடுப்பதோடு, நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதே ஆகும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, தொழிற்கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் திரு. கோலித்த கமல் ஜினதாச உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் மீனவ மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி வெள்ளிக்கிழமை (21.11.2025) கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. கண்காட்சியின் 2ஆம் நாள் நிகழ்வான சனிக்கிழமை (22) விவசாயத்துறை அமைச்சர் லால்காந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வின் போது, சீரற்ற காலநிலை உட்பட இயற்கை அனர்த்தங்களால் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இவற்றை தடுப்பதற்குரிய விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. மேற்படி குழுவின் அறிக்கையும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
மீன்பிடி கைத்தொழிலின்போது எவ்வித குற்றமும் இழைக்காத, சட்டத்திட்டங்களின்போது செயல்பட்ட மாத்தறை, தங்கலை, காலி ஆகிய பகுதி மீனவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எமது அமைச்சின் 25 வருடகாலம் சேவையாற்றியவர்களுக்குரிய கௌரவிப்பும் இடம்பெற்றது. கடல்சார் சட்டங்களை முறையாக பின்பற்றி செயல்படும் கடற்றொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. மீன்பிடி தொழில்துறையென்பது கடல் மற்றும் ஆறுகளுக்கு சென்று மீன்பிடிப்பது மட்டும் அல்ல.
அதனை சார்ந்து பல விடயங்கள் உள்ளன. எனவே, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் 10.6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது மேலும் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீன்பிடி துறைமுகங்களை கட்டியெழுப்புவதற்கும் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய மீன்பிடி கைத்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது இலக்காகும். அதற்கமைய மீன்பிடித்தொழில்துறையும் நவீனமயப்படுத்தப்படும். மீனவ குடும்பங்களை நாம் நேரில் சந்தித்து கலந்துரையாடி, பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றோம்.
மீன்பிடி தொழில்துறை மூலம் எமது நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும். அந்திய செலாவணியை பெறுவதற்கு வழிசமைக்க வேண்டும். அதற்குரிய பங்களிப்பை நாம் வழங்க வேண்டும் என்றார்.
மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், தர்மபிரிய திசாநாயக்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.