Home செய்திகள்முதன்மை செய்திகள்மகளிர் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா மகளிர் அணி

மகளிர் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா மகளிர் அணி

by Amizhthu
0 comments

குவாஹாட்டி, பர்சாபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (29) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்தை நொக்-அவுட் செய்த தென் ஆபிரிக்கா, முதாலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்கா 125 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

அணித் தலைவி லோரா வுல்வார்ட் குவித்த அபார சதம், மாரிஸ்ஆன் கெப் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

மேலும் 2017இலும் 2022இலும் அரை இறுதிகளில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விகளுக்கு இம் முறை தென் ஆபிரிக்கா சரியான பதிலடி கொடுத்து அந்தத் தோல்விகளை நிவர்த்திசெய்துகொண்டது.

banner

இப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணி என கருதப்பட்ட இங்கிலாந்துக்கு நெட் சிவர் – ப்றன்ட் முதலில் களத்தடுப்பில் ஈடுபட எடுத்த முடிவு தவறு என்பதை புரிந்துகொள்ள வெகுநேரம் செல்லவில்லை.

தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டும் தஸ்மின் ப்றிட்ஸும் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எவ்வாறாயினும் இரண்டு சந்தர்ப்பங்களில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த தென் ஆபிரிக்காவை வீழ்ச்சியிலிருந்து மீட்ட பெருமைலோரா வுல்வார்டையே சாருகிறது.

தஸ்மின் ப்றிட்ஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவரது விக்கெட் உட்பட 3 விக்கெட்கள் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. (119 – 3 விக்.)

இதனைத் தொடர்ந்து லோரா வுட்வார்டும் மாரிஸ்ஆன் கெப்பும் இணைந்து 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மாரிஸ்ஆண் கெப் 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க மேலும் இரண்டு விக்கெட்கள் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. (202 – 6 விக்.)

ஆனால், துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடிய லோரா வுல்வார்ட் 7ஆவது விக்கெட்டில் க்ளோ ட்ரையொனுடன் மேலும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டு 48ஆவது ஓவரில் களம் விட்டகன்றார்.

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய அவர் 143 பந்துகளில் 20 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 169 ஓட்டங்களைக் குவித்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் குவித்த 10ஆவது சதம் இதுவாகும். அத்துடன் தனது 117ஆவது இன்னிங்ஸில் 48ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது 5000 ஓட்டங்களை அவர் பூர்த்திசெய்தார்.

க்ளோ ட்ரையொன் 33 ஓட்டங்களுடனும் நாடின் டி க்ளார்க் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்க்ளையும் லோரென் பெல் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

320 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 42.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களான மாரிஸ்ஆன் கெப், அயாபொங்கா காக்கா ஆகிய இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் 3 துடுப்பாட்ட வீராங்கனைகளை ஆட்டம் இழக்கச் செய்து இங்கிலாந்தை திக்குமுக்காட வைத்தனர்.

அமி ஜோன்ஸ், ஹீதர் நைட், டெமி போமன்ட் ஆகிய மூவரும் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றனர்.

அணித் தலைவி நெட் சிவர் – ப்றன்ட், அலிஸ் கெப்சி ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

அலிஸ் கெப்சி 50 ஓட்டங்களுடனும் நெட் சிவர் – ப்றன்ட் 64 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்ததும் இங்கிலாந்தின் தோல்வி பெரும்பாலும் உறுதியாயிற்று.

அவர்களைத் தொடர்ந்து சொஃபி டன்க்லி (2), சார்ளி டீன் (0), சொஃபி எக்லஸ்டோன் (2) ஆகிய மூவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

மத்திய வரிசையில் டெனி வியட் – ஹொஜ் 34 ஓட்டங்களையும் லின்சி ஸ்மித் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 7 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நாடின் டி க்ளார்க் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: லோரா வுல்வார்ட்

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00