Home இந்தியாNew Delhiஇந்தியா உடனடி எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை.

இந்தியா உடனடி எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை.

by Amizhthu

மேற்காசியாவில் நிலவி வரும் போர் காரணமாக, இந்தியாவில் உடனடியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. உலகில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் போக்குவரத்தில், 5ல் ஒரு பங்கு இந்த வழியாகத் தான் நடந்து வருகிறது.

குறிப்பாக, இந்தியாவின் மொத்த எரிபொருள் இறக்குமதியில், 40 முதல் 50 சதவிதம் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் கொண்டு வரப்படுகிறது. இப்படிபட்ட சூழலில், இந்த ஜலசந்தியை மூடியிருப்பது இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் எழுந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் உடனடியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது;

இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் இருப்பு உள்ளது. எனவே, உடனடி தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு கிடையாது. நிலைமையைக் கண்காணிக்க அமைச்சகம் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

இந்தியா தனது எரிபொருள் தேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் மூலம் நிவர்த்தி செய்கிறது. வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து 60 சதவிதம் இறக்குமதி செய்யப்படுவதால், ஹார்முஸ் ஜலசந்தி மீதான சார்பு 40 சதவிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், அவசர காலத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது, இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00