Home செய்திகள்தமிழீழம்தமிழக மீனவர்களால் தாக்கப்பட்ட பரித்திதுறை மீனவர் வழக்கில் நீதி கிடைக்கச் செய்யுமாறு ஆளுநரையும் உபாலி சமரசிங்கவையும் ரவிகரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களால் தாக்கப்பட்ட பரித்திதுறை மீனவர் வழக்கில் நீதி கிடைக்கச் செய்யுமாறு ஆளுநரையும் உபாலி சமரசிங்கவையும் ரவிகரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.

by Amizhthu

அண்மையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவன் ஒருவன் தமிழக மீனவர்களால் பிடித்துச்செல்லப்பட்டு மிகக் கொடூரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட விடையம் தொடர்பில் அரசு உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மீனவனுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கூட்டுறவுப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரைக் கோரியுள்ளார்.

அத்தோடு தமிழக மீனவர்களின் இத்தகைய செயற்பாடு கண்ணியமற்ற, கோழைத்தனமான செயற்பாடெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை (29.04.2026) இடம்பெற்ற நிலேயிலேயே நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணம் பரித்தித்துறையைச் சேர்ந்த ஒரு மீனவனை தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிடித்துச்சென்று அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.

இத்தகைய செயற்பாட்டிற்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உரியதரப்பினர், உரியவகையில் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்திலே வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

குறிப்பாக வடக்குமாகாணத்திலே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் கடற்றொழிலோடு தொடர்புடைய கரையோர மாவட்டங்களாக காணப்படுகின்றன.

எமது மீனவர்கள் கடற்கொள்ளைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் கிடையாது.

வடமாகாணத்தின் கடற்பரப்பென்பது மீன்வங்கியெனச் சொல்லப்படுகின்ற வளம்பொருந்திய கடற்பரப்பாகும்.

அத்தகைய வளம்பொருந்திய கடற்பரப்பில் கடற்றொழில் செற்பாடுகளில் ஈடுபடும் எமது மீனவர்கள் இன்னுமொரு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடவேண்டிய அவசியமும்கிடையாது.

கடற்றொழிலைப்பற்றி நான் நன்கு அறிவேன். கடலில் வலையை விரிக்கும்போது, கடல் நீரோட்டத்தில் வலை, படகு என்பன இழுத்துச் செல்லப்படுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறாக தமிழக மீனவர்களால் பிடித்துச்செல்லப்பட்ட பரித்தித்துறை மீனவனை தமிழகப் பத்திரிக்கைகள் கடற்கொள்ளையன் என பொய்யாகச் சித்தரித்துள்ளன. ஊடக ஒழுக்கநெறிகளை மீறி பொய்ச் செய்திகளைப் பரப்பியுள்ளன.

கடந்தகாலத்தில் எல்லைதாண்டி வருகைதந்து எமது கடற்பரப்புக்களில் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளை முல்லைத்தீவு மீனவர்கள் கரைக்குக் கொண்டுந்தனர். இதன்போது குறித்த இந்திய மீன்பிடிப் படகுகளை கரைக்கு கொண்டுவந்த எமது மீனவர்களுக்கெதிராகவே பொலிசாரால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சரிபிழைகளுக்கு அப்பால் சட்டம் ஒழுங்கைப் நிலைநாட்டுவதற்காகவே பொலிசாரால் எமது மீனவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்தோடு இவ்வாறு கரையே அழைத்துவரப்பட்ட இந்தியமீனவர்கள் கண்ணியமான முறையில் நடத்தப்பட்டதுடன், மீளவும் உரியமுறையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் தமிழக மீனவர்கள் முறையற்ற விதத்தில் எமது மீனவரை பிடித்துக்கொண்டு சென்றது மாத்திரமின்றி, கைகள் மற்றும் கால்களைக்கட்டி மிக்கடுமையாகத் தாக்கிச் சித்திரவதைக்குள்ளாக்கியுள்ளனர். ஈழத் தமிழர்கள் தமக்குத் தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறிக்கொண்டு இவ்வாறான கொடூர செயற்பாடுகளில் தமிழக மீனவர்கள் ஈடுபடுகின்றனர்.

சோமாலியா உள்ளிட்ட ஆபிரிக்க கடற்பரப்புக்களினூடாக கப்பல்கள் செல்லும்போது கடற்கொள்ளைகள் இடம்பெறுவதாக அறிந்திருக்கின்றோம். ஆனால் இங்கே எமது மீனவர்கள் கொள்ளையிடுவதற்கான அவசியமில்லை. கொள்ளையிடுவதற்கும் எதுவுமில்லை.

எனவே இந்தவிடயத்தில் வடமாகாண ஆளுனர் மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர்வதுடன், இந்த கொடூர செயற்பாட்டிற்குரிய நீதியையும் நிலைநாட்டவேண்டும்.

மேலும் சண்டையிடுவதற்கு வடபகுதியைச் சேர்ந்த அனைவராலும் இயலும். ஆனால் தனியே ஒருவரை இவ்வாறு கடத்திச்சென்று, கைகளையும், கால்களையும் கட்டிவிட்டு சுற்றி நின்று தாக்குவது மிகவும் கீழ்தரமான கோழைத்தனமான செயற்பாடு – என்றார்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00