முதலமைச்சர் விஜய் இன்று (மே 11) திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். மேலும், விஜய் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் தலைமையிலான முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் உள்ளிட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இன்றைய தினம் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற முதல்வர் விஜய், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்தில், அவரை சந்தித்து பேசினார். முன்னதாக வீட்டுக்கு வந்த முதல்வரை, உதயநிதி வாசலில் நின்று ஆரத்தழுவி வரவேற்றார்.வீட்டுக்குள் வந்த விஜயை, கட்டி அணைத்து ஸ்டாலின் வரவேற்றார்; பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பதிலுக்கு விஜய்யும் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தினார். தொடர்ந்து ஸ்டாலின், விஜய், உதயநிதி, ஆனந்த் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினர். விஜய் வருகையின்போது முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.ஆர்கே பன்னீர்செல்வம், மகேஷ் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர். அவர்களும் விஜய்யை வரவேற்றனர்.
இதை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க விஜய் புறப்பட்டு சென்றார். வீட்டு வாசலிலேயே அவரை, துரை வைகோ பொன்னாடை அணிவித்து வரவேற்றா். வீட்டினுள் அவரை வரவேற்ற வைகோ, சற்று நேரம் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.வைகோவின் குடும்பத்தினர், உறவினர்கள், கட்சியினர், வீட்டு பணியாளர்கள் அனைவரும் விஜய்யுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரையும் வைகோ விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். பேசி முடித்து புறப்பட்ட முதல்வரை, வாசல் வரை வந்து வைகோ வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைக்கட்சியின் தலைவர் திருமாவளவனையும் விஜய் நேரில் சந்தித்து பேச உள்ளார்.
அரசியல் நாகரிகம் – முதல்வர் விஜய் சந்திப்பு பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.