Thursday, November 5, 2026

மன்னார் – இராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

மன்னார் | 05.11.2026

மன்னார் மற்றும் இந்தியா இராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு அறிக்கையின் பிரகாரம் அந்த கப்பல் சேவையை ஆரம்பிக்கவேண்டும் என பரிந்துரைத்தால் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின்போது  நிலையியல் கட்டளை 27/2இன் கீழ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரால் கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி, மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மன்னார் மற்றும் இந்தியா இடையே பயணிகள் மற்றும் பொருட்கள் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியிலான வர்த்தக சந்தை, பொருளாதார மற்றும் நிதிப் பிரிவுகள் உள்ளடங்கும் வகையில் முறையான சாத்தியக்கூறு ஆய்வை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளின்படி குறிப்பிட்ட கப்பல் சேவையை ஆரம்பிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டால் அந்த சேவை தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் கால வரையறை, அடிப்படை வசதிகள் அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களை அமைப்பது உள்ளிட்ட சகல வசதிகள் தொடர்பில் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும்.

இலங்கை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை 2011ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் இரண்டாவது பிரிவில்  குறிப்பிடப்பட்டுள்ள தூத்துக்குடி மற்றும் கொழும்பு துறைமுகம் இடையேயும் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் பயணிகள் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளின் பயணிகள் கப்பல் சேவையுடன் தொடர்புடைய துறைமுகங்கள் தொடர்பான விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சின் செயலாளர் அடங்கலாக பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த சேவைகள் தொடர்பான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்த கப்பல் சேவைகள் மூலம் வடக்கு மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படக்கூடிய தொடர்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த சேவை தொடர்பான நடவடிக்கைகள் அபிவிருத்தியடையும்போது வடக்கு மாகாண மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் ஏற்படும். முதலீட்டு வாய்ப்புகளும் ஏற்படும். அத்துடன் வடக்கு மக்கள் உள்ளிட்ட இலங்கையர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் இருதரப்பு தொடர்புகளை பலப்படுத்த முடியுமாக இருக்கும். இது தொடர்பான தீர்மானங்கள் குறித்த ஆய்வுகளை செய்த பின்னரே எடுக்க முடியும் என்றார்.

Leave a Comment