Thursday, November 5, 2026

இலங்கை கடல் பரப்பில் 109 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன; 353 பேர் கைது செய்யப்பட்டனர்!

இலங்கை | 05.11.2025

2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கடற்பரப்பில் வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சுமார் 109 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி மிக்க போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 353 சந்தேக நபர்களும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடற்படையினரால் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மீன்பிடிப் படகு நேற்று மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஜயம் செய்திருந்த பிரதி அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் 2025ஆம் ஆண்டு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்போது 75 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய வேலைத்திட்டத்துக்கமைய 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 109 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி மிக்க போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 69 பில்லியன் ரூபாய் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. 

“முழு நாடும் ஒன்றாக” திட்டத்துக்கமைய 314,200 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைதானவர்களில் 1,050 பேர் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர்களாவர். அதேபோன்று, கடந்த இரண்டு வருடங்களுக்குள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்போது 11 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் உள்ளடங்கலாக 63 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைகளின்போது 11 வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலாக 353 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கடற்படையினர் நாட்டுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதனைச் சமாளிப்பது இலகுவான காரியமல்ல. கடலில் 500 முதல் 600 வரையிலான படகுகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

அவற்றுள் போதைப்பொருளைக் கடத்தி வரும் படகைக் கண்டறிவது சிரமமான விடயமாகும். புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்களுடன் இராஜதந்திர ரீதியாக நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் இவ்வாறான தகவல்கள் கிடைக்கின்றன.

எனவே, போதைப்பொருளுக்கான கேள்வியை சமூகத்தில் இல்லாமல் செய்ய எமது அரசாங்கம் முன்னின்று பல சிறப்புத் திட்டங்களை ஒழுங்கமைத்து பொலிஸார் முப்படையினரின் ஊடாக முன்னெடுத்து வருகிறது என்றார். 

Leave a Comment