செய்திகள்
இரத்தம் பேசும் இறுதி நிலம்
முள்ளிவாய்க்கால் —
அது ஒரு கிராமத்தின் பெயரல்ல,
மனித இனத்தின் மனச்சாட்சியில்
எரிந்து கொண்டிருக்கும்
ஒரு இரத்தச் சாட்சியம்.
அங்கே
மரங்கள் கூட நிழல் தர அஞ்சின;
வானம் கூட புகை மூட்டத்தால்
கருப்புக் கவசம் போர்த்தியது;
கடலும் சிவந்தது —
ஈழத் தமிழரின் ரத்தம்
அலைகளாய் அதில் கலந்ததால்.
சிங்கள பேரினவாத அரசின்
இரும்புக் கைகளில்
மனிதாபிமானம் தூக்கிலிடப்பட்டது;
படுகொலைகள் மட்டும்
தேசியக் கொள்கையாய் மாறின.
பாதுகாப்பு வலயம் என்ற பெயரில்
மரண வலயம் கட்டப்பட்டது;
உயிர் காக்க ஓடிய மக்களின் மேல்
வானத்திலிருந்து நெருப்பு பொழிந்தது.
அம்மாவின் மார்பில் குழந்தை இறந்தது;
குழந்தையின் கண்முன் தந்தை சிதறினான்;
மண்வாசனை வீசிய நிலம்
மனித சதையின் வாசனையால்
மூச்சுத்திணறியது.
கொத்து கொத்தாக விழுந்தார்கள் தமிழர்கள் —
ஒரு இனத்தின் எதிர்காலம்
ஒரே கணத்தில் மண்ணாகியது.
உயிர் தப்ப ஓடிய கால்கள்
சடலங்களை மிதித்தபடி நகர்ந்தன.
அழுகையால் குரல் கிழிந்த தாய்மார்கள்,
❝என் பிள்ளையை பார்த்தீர்களா?❞ என்று
மரணத்தின் நடுவே அலறினார்கள்;
ஆனால் பதில் சொல்வதற்குள்
அவர்களும் சிதறிப்போனார்கள்.
இடப்பெயர்வு —
அது வெறும் நகர்வல்ல;
ஒரு மக்களின் நினைவுகளையே
வேரோடு பிடுங்கிய பேரழிவு.
தாலாட்டுப் பாடல்கள் கேட்ட வீடுகள்
சாம்பலானது;
கோயில் மணி ஒலித்த தெருக்கள்
பீரங்கி சத்தத்தில் புதைந்தது.
கையில் ஒரு துணிப்பை,
மார்பில் ஒரு குழந்தை,
இதயத்தில் ஆயிரம் பயங்கள் —
அதுவே
முள்ளிவாய்க்காலின் அகதி வாழ்க்கை.
ஆனால் —
அந்த இரத்த நதிக்குள் கூட
மண்டியிட மறுத்தவர்கள் இருந்தார்கள்.
கடைசி மூச்சு வரை
போராடி நின்றார்கள் போராளிகள்;
உடல்கள் சிதறினாலும்
உறுதி சிதையவில்லை.
மரணத்தை பார்த்து சிரித்தார்கள்;
பயத்தை பார்த்து முன்னேறினார்கள்;
“தமிழீழம் வாழும்” என்ற நம்பிக்கையை
இறுதி துப்பாக்கிச் சூட்டிலும்
தாங்கிச் சென்றார்கள்.
தளபதிகள் விழுந்தார்கள் —
ஆனால் தோல்வியாய் அல்ல;
வரலாற்றின் இரத்தக் கையொப்பமாக.
ஒரு தலைமுறை
தன் உயிரைச் செலுத்தி எழுதிய
விடுதலைப் பாடலாய்
அவர்கள் நினைவு நிற்கிறது.
அந்த இறுதி மணித்துளியிலும்
எதிரிகளின் இதயத்தில்
பயமாக நின்ற பெயர் ஒன்று இருந்தது —
தமிழினத் தேசிய தலைவர்மேதகு வே. பிரபாகரன்
மண்டியிட மறுத்த தலைவர்;
சுற்றி வளைத்த போதிலும்
சிந்தனை வளைந்ததில்லை.
அவரின் கண்களில்
இறுதி வரை அணையாத தீ இருந்தது;
ஒரு இனத்தின் உரிமைக்காக
உயிரையே ஆயுதமாக்கிய
அசைக்க முடியாத மனம் இருந்தது.
போர்க்களம் எரிந்தாலும்
அவரின் சவால் அணையவில்லை;
உடலை வெல்ல முடிந்தாலும்
ஒரு இனத்தின் கனவை
யாராலும் புதைக்க முடியவில்லை.
முள்ளிவாய்க்கால் இன்று
மண்ணில் புதைக்கப்பட்ட வரலாறு அல்ல;
ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திலும்
துடிக்கும் நினைவு.
அங்கே இறந்தவர்கள்
வெறும் எண்ணிக்கைகள் அல்ல;
அவர்கள் பெயரில்லா வீரர்கள்,
அம்மாக்கள், குழந்தைகள்,
கனவுகளுடன் உயிரிழந்த மக்கள்.
இரவு வரும் போது
முள்ளிவாய்க்காலின் காற்று இன்னும் அழுகிறது;
கடல் இன்னும் சிவப்பாகத் தோன்றுகிறது;
மண்ணின் அடியில் இருந்து
ஒரு கேள்வி இன்னும் எழுகிறது —
❝இந்த உலகம் எங்கே இருந்தது?❞
ஆனால் வரலாறு மௌனமில்லை.
ரத்தத்தில் எழுதப்பட்ட உண்மைகள்
ஒருநாள் முழங்கும்.
முள்ளிவாய்க்கால் —
அது ஒரு முடிவு அல்ல;
ஒரு இனத்தின் அழியாத நினைவுக் கல்லறை;
நீதியைத் தேடும்
நித்தியக் குரல்.
❝மண்ணில் விழுந்த உடல்கள் அழியலாம்;
ஆனால் விடுதலைக்காக உயிர் தந்தோரின் நினைவு
ஒரு இனத்தின் இரத்தத்தில் என்றும் உயிரோடு இருக்கும்.❞

ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர்
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த பல சமர்க்களங்களில் வீரகாவியம் படைத்து தங்களை தமிழீழ விடுதலைக்காக ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 16.05.2026 ஞாயிறு ஊரி மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவீரர் பொதுக்குறியீட்டுத் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடருடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. பெரும் தளபதிகளிற்கான ஈகைச்சுடர்களை மாவீரர்களின் குடும்ப உறவுகளும், உணர்வாளர்களும் ஏற்றிவைத்தனர். மண்டியிடா மாவீரர்களுக்கு அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் மக்களால் செலுத்தப்பட்ட வேளையில் இசைக்கலைஞர்களால் மாவீர வணக்கப் பாடல்களுடன், எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.
நடுகல் நாயகர்களாக தங்களை விதையாக்கிய பெருந்தளபதிகளையும், மாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் எழுச்சி வணக்கப் பாடல்கள், எழுச்சி நடனங்களுடன், சிறப்புரையும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் இளையோர், சிறுவர்களுடன் இணைந்து நம்பிக்கையுடன் பாடினர். தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் உறுதியெடுத்து நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு




































சிலம்பம் பிரிவில்தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மாணவக் கண்மணிகளுக்கு நெஞ்சம் நிறைந்தநல்வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.
குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15-05-2026) நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் காலை 09 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
முதன்மை நினைவுச் சுடரினை 06 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து, தானும் படுகாயம் அடைந்து இன்றும் படுகொலையின் சாட்சியாக இருக்கும் விசுவலிங்கம் அன்னலட்சுமி ஏற்றி வைத்தார்
தொடர்ந்து நினைவுச்சுடர்களை நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை பி.கமல்ராஜ் அடிகளார், இந்தமத குரு கா.புவனேந்திரசர்மா மற்றும் உறவுகளை பறிகொடுத்த உறவுகள், உணர்வாளர்கள் என பலர் நினைவுச் சுடர்களை ஏற்றிவைத்தனர்.
நினைவுத் தூபிக்கான மலர் மாலையினை நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றம் நெடுந்தீவு பங்குத்தந்தை பி.கமல்ராஜ் அடிகளார் ஆகியோரும், குமுதினி நினைவேந்தல் குழு தலைவர் வி.ருத்திரன் மற்றும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன் ஆகியோரும் இணைந்து அணிவித்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர் நினைவுத் தூபிக்கான மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலித்தனர்.
அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் அவலங்கள் நினைவாக தீவக நினைவேந்தல் குழுவினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
இதேவேளை படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் காலை 8.15 மணிக்கு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம் என்பவற்றில் சம நேரத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.







விடுதலைக்கான நெருப்பு இன்னும் அணையவில்லை
குழந்தைகள் அழுத நிலம்
முள்ளிவாய்க்கால்
ஒரு சாதாரண போர்க்களம் அல்ல.
அது சிதைந்த கனவுகளின் கல்லறை.
தாய்மார்கள்
உயிரற்ற தங்கள் குழந்தைகளை
மார்போடு அணைத்தபடி
புகைமூட்டத்திலும்
குண்டு மழையிலும் நடந்தார்கள்.
வானம் கருகியது.
மண் இரத்தத்தில் நனைந்தது.
கடலும் கூட
அந்த அழுகையை தாங்க முடியவில்லை.
“பாதுகாப்பு வலயம்” என்ற பெயரில் மரண நிலம்
மருத்துவமனைகள் தாக்கப்பட்டன.
கோவில்கள் இடிந்தன.
பள்ளிகள் மரணத்தின் தஞ்சமாயின.
“பாதுகாப்பு பகுதி” என்று கூறப்பட்ட இடம்
மக்கள் புதைக்கப்பட்ட
இரத்தப் பள்ளமாக மாறியது.
பசி, பயம், கண்ணீர் —
அதற்கிடையில் உயிர் தப்பிக்க
“முள்ளிவாய்க்கால் கஞ்சி” மட்டுமே இருந்தது.
அது உணவு அல்ல.
ஒரு இனத்தின் உயிர்ப்போராட்டம்.
உலகத்தின் அமைதி
உலகம் அனைத்தையும் பார்த்தது.
ஆனால் உலகம் பேசவில்லை.
அரசியல் உண்மையை புதைத்தது.
மனித உரிமைகள்
வெறும் வார்த்தைகளாக மாறின.
தமிழர் இரத்தம் மணலில் கலந்தபோது
நீதியின் கதவுகள் மூடப்பட்டன.
அமைதி கூட
எங்களை கொன்ற ஆயுதமாக மாறியது.
முள்ளிவாய்க்காலின் தாய்மார்கள்
இன்றும் தமிழ் தாய்மார்கள்
தங்கள் காணாமல் போன பிள்ளைகளின்
புகைப்படங்களை மார்போடு அணைத்திருக்கின்றனர்.
அவர்களின் கண்ணீர்
நினைவாக மாறியது.
அவர்களின் துயரம்
எதிர்ப்பாக மாறியது.
அவர்கள் இரக்கம் கேட்கவில்லை.
உண்மையை கேட்கிறார்கள்.
நீதியை கேட்கிறார்கள்.
அணையாத விடுதலை நெருப்பு
முள்ளிவாய்க்கால்
ஒரு முடிவு அல்ல.
அது இன்னும்
ஒவ்வொரு தமிழ் இதயத்திலும்
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு.
ஒவ்வொரு நினைவும்
ஒரு எதிர்ப்பு.
ஒவ்வொரு மெழுகுவர்த்தியும்
ஒரு உறுதி.
சாம்பலிலிருந்து எழும்
தமிழ்த் தேசிய உணர்வு
இன்னும் உயிருடன் இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் உயிருடன் இருக்கிறது
ஒவ்வொரு தமிழ் இதயத்திலும்

ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், புலனாய்வு மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்
16/05/2026
ரஷ்யாவின் சர்மாத் ஏவுகணை, நேட்டோவின் பாதுகாப்பு அச்சம், மற்றும் புதிய பனிப்போரின் எழுச்சி
புதிய மூலோபாய யுகத்தின் தோற்றம்
உலக பாதுகாப்பு அமைப்பு இன்று பனிப்போருக்குப் பிந்தைய காலத்தின் மிக ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது. ரஷ்யாவின் RS-28 “சர்மாத்” கண்டம் தாண்டும் அணு ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையும் அதனை விரைவாக போர்பணிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையும் உலக அரசியல் சமநிலையை ஆழமாக மாற்றியமைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சர்மாத் ஏவுகணையை சாதாரண அணு ஆயுதமாக அல்லாமல், மேற்கத்திய உலகின் முழு பாதுகாப்பு அமைப்புகளையும் முறியடிக்க வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை “அடக்க முடியாத” ஆயுதமாக வர்ணித்துள்ளார்.
இது வெறும் இராணுவ அறிவிப்பல்ல. இது அமெரிக்கா மற்றும் நேட்டோ தலைமையிலான மேற்கத்திய ஆட்சிச் சூழலை நேரடியாக சவாலுக்கு உட்படுத்தும் ஒரு அரசியல் அறிவிப்பு.
உக்ரைன் போர், பொருளாதார தடைகள், எரிசக்தி மோதல்கள், உளவு போர்கள் மற்றும் உலக அரசியல் கூட்டணிகளின் உடைப்பு ஆகியவை உலகத்தை மீண்டும் குளிர்போர் சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளன. இந்த நிலையில், சர்மாத் ஏவுகணை என்பது ஒரு ஆயுதத்தை விட அதிகம் — அது “ரஷ்யா இன்னும் உலக வல்லரசு” என்ற மாஸ்கோவின் சக்தி அறிவிப்பு.
சர்மாத் ஏவுகணை: உலகத்தையே சுற்றி வந்து தாக்கும் ஆயுதம்
பாரம்பரிய ஏவுகணைகள் வட துருவத்தின் வழியாகச் செல்லும் பாதையையே அதிகம் நம்பியிருக்கும். ஆனால், சர்மாட் ஏவுகணை தென் துருவம் வழியாகவோ அல்லது புவிக்கு அருகாமையில் உள்ள சுற்றுப்பாதைகள் (Suborbital pathways) வழியாகவோ இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏவுகணை எதிர்ப்பு கவசங்களின் தர்க்கத்தையே தகர்க்கிறது. நேட்டோவின் பெரும்பாலான ரேடார் மற்றும் இடைமறிப்பு அமைப்புகள் வட திசையிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கணித்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத திசைகளிலிருந்து தாக்குவதன் மூலம், சர்மாட் தற்போதைய பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்துகிறது.
சுமார் 35,000 கிலோமீட்டர் வரை பாயும் இதன் செயல்பாட்டு எல்லை, ரஷ்யாவிற்கு உலகளவில் எந்தவொரு இடத்தையும் தாக்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது புவியியலையே ஒரு ஆயுதமாக மாற்றுகிறது.
அவாங்கார்ட் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்கள்: உண்மையான புரட்சி
ஏவுகணையை விட, அது சுமந்து செல்லும் அவன்கார்ட் (Avangard) எனப்படும் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்களே அதிபயங்கரமானவை. சாதாரண ஏவுகணைகள் கணித ரீதியாகக் கணிக்கக்கூடிய பாதையில் செல்லும். ஆனால், அவன்கார்ட் வாகனங்கள் ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு அதிக வேகத்தில் (Mach 20+) பயணிக்கும்போது, வளிமண்டலத்தில் தனது உயரம், திசை மற்றும் வேகத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும்.
இதனால், எதிரி நாடுகளின் கணினிகளால் அதன் இலக்கைத் துல்லியமாகக் கணிக்க முடியாது. இன்றைய மேற்கத்திய தொழில்நுட்பங்களால் இவ்வளவு அதிவேகமாக திசை மாறும் ஒரு பொருளை இடைமறிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சர்மாட்டின் பேரழிவு சக்தி
சர்மாட் ஏவுகணை பல அணு ஆயுதத் தலைப்புகளை (Warheads) ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் அழிவு சக்தி இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா அல்லது நாகசாகியில் ஏற்பட்ட அழிவை விட பல மடங்கு அதிகம்.
ஒரு முக்கிய நகரத்தின் மீது இது வெடித்தால் ஏற்படும் வெப்பக் கதிர்வீச்சு, ஒட்டுமொத்த நகரத்தையும் சில நிமிடங்களில் சாம்பலாக்கிவிடும். பாரிஸ், லண்டன், பெர்லின் அல்லது நியூயார்க் போன்ற நகரங்கள் இதன் இலக்காக மாறினால் ஏற்படும் பாதிப்புகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. “தன்னையும் அழித்து எதிரியையும் அழிக்கும்” (Mutual Assured Destruction) என்ற அணு ஆயுதத் தர்க்கத்தின் அடிப்படையில் இது அமைதி நிலவ வழிவகுப்பதாகக் கூறப்பட்டாலும், அது மனிதகுலத்திற்கே ஒரு அச்சுறுத்தலாகும்.
நேட்டோ பாதுகாப்பு அமைப்புகள் ஏன் சிக்கலில் உள்ளன?
பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புகள் ஏஜிஸ் அஷோர் (Aegis Ashore), தாட் (THAAD) மற்றும் பேட்ரியாட் (Patriot) போன்ற ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்புகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன. ஆனால், சர்மாட் மற்றும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பங்கள் இந்தத் தற்காப்பு அரண்களைப் பயனற்றதாக்குகின்றன. தற்காப்புத் தொழில்நுட்பத்தை விடத் தாக்குதல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவது உலகளாவிய பாதுகாப்பில் சமநிலையின்மையை உருவாக்குகிறது.
புதினின் அணு அரசியல்: உலகிற்கு அனுப்பப்படும் செய்தி
சர்மாத் ஒரு இராணுவ ஆயுதமாக மட்டுமல்ல; அது ஒரு அரசியல் உளவியல் கருவியாகவும் செயல்படுகிறது.
புதின் தொடர்ந்து மேற்கத்திய விரிவாக்கம், நேட்டோ வளர்ச்சி, மற்றும் ரஷ்யாவை சூழ்ந்துகொள்ளும் முயற்சிகளை தனது அணு நவீனமயமாக்கலுக்கான காரணமாக விளக்குகிறார்.
கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்படுவது, உக்ரைனுக்கு மேற்கத்திய இராணுவ ஆதரவு வழங்கப்படுவது, பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது ஆகிய அனைத்தையும் மாஸ்கோ “ரஷ்யாவை நிரந்தரமாக பலவீனப்படுத்தும் திட்டம்” எனக் காண்கிறது.
இதனால் சர்மாத் போன்ற அமைப்புகள் ரஷ்யாவின் “அரசியல் உயிர் பாதுகாப்பு” கருவிகளாக விளக்கப்படுகின்றன.
இதன் மூலம் மாஸ்கோ உலகிற்கு கூறும் செய்தி தெளிவானது:
“ரஷ்யா இன்னும் உலகத்தை அச்சுறுத்தக்கூடிய அணு வல்லரசு.”
எரிசக்தி போர்: நார்ட்ஸ்ட்ரீம் மற்றும் உலக ஆதிக்கம்
இராணுவ மோதல்களுடன் இணைந்து, எரிசக்தி அரசியலும் உலகப் போராட்டத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், நார்ட்ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்தை அமெரிக்கா குறைந்த மதிப்பில் கைப்பற்ற முயல்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் பார்வையில், மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் மற்றும் எரிசக்தி கட்டுப்பாடுகளை அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றன.
2022ஆம் ஆண்டு நார்ட்ஸ்ட்ரீம் குழாய்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.
ஐரோப்பா தற்போது ஒரு இரட்டை அழுத்தத்திற்குள் உள்ளது:
ஒருபுறம் அமெரிக்க பாதுகாப்பு கூட்டணி, மறுபுறம் ரஷ்ய எரிசக்தி சார்பு.
இதனால் எரிசக்தியும் அணு ஆயுதங்களும் ஒரே உலக அரசியல் போரின் இரண்டு முகங்களாக மாறியுள்ளன.
மீண்டு வரும் பனிப்போர் மனநிலை
இன்றைய உலகின் மிக ஆபத்தான மாற்றம் தொழில்நுட்பத்தில் அல்ல — மனநிலையில்தான் உள்ளது.
“அணு தடுப்பு”, “முதற்கட்ட தாக்குதல்”, “முழுமையான பழிவாங்கல்”, “அணு சமநிலை” போன்ற பனிப்போர் கால சொற்கள் மீண்டும் உலக அரசியல் உரையாடல்களில் தோன்றுகின்றன.
இது உலக வல்லரசுகளுக்கிடையேயான நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிட்டதைக் காட்டுகிறது.
ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் பலவீனமடைந்துள்ளன.
தகவல் தொடர்பு வாயில்கள் குறைந்துள்ளன.
உலகமயமாக்கல் தானே அரசியல் பிரிவுகளாக உடைந்து வருகிறது.
இதன் விளைவாக, உலக அரசியலில் இராணுவ சக்தி மீண்டும் முதன்மை மொழியாக மாறுகிறது.
சர்மாத் ஏவுகணை இந்த புதிய யுகத்தின் சின்னமாக மாறியுள்ளது.
உலக பாதுகாப்பின் எதிர்காலம்
சர்மாட் போன்ற ஆயுதங்களின் வருகை பல கேள்விகளை எழுப்புகிறது:
இந்த வேகத்திற்கு ஈடாகப் பாதுகாப்புத் தொழில்நுட்பம் வளருமா?
இது ஒரு புதிய உலகளாவிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்குமா?
ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளால் இந்தப் பதற்றத்தைத் தணிக்க முடியுமா?
தற்போது ரஷ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகிய அனைத்தும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், விண்வெளி இராணுவக் கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த போர்முறை ஆகியவற்றில் தீவிரமாக முதலீடு செய்து வருகின்றன.
மனிதகுலம் இன்று தடுப்பு சமநிலைக்கும் பேரழிவு மோதலுக்கும் இடையிலான ஆபத்தான எல்லையில் நிற்கிறது.
முடிவுரை: புதிய அணு யுகத்தின் தொடக்கம்
சர்மாட் ஏவுகணை என்பது ஒரு இராணுவ முன்னேற்றம் மட்டுமல்ல; அது ஒரு புதிய மூலோபாய சகாப்தத்தின் தொடக்கம். இது பனிப்போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கிற்கு ஒரு நேரடி சவாலாகும். அணு ஆயுத மோதல் என்ற நிழல் மீண்டும் உலக அரசியலில் நீளத் தொடங்கியுள்ளது.
இந்த ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் காலத்தில், மனிதகுலத்தின் உயிர்வாழ்வு என்பது இராணுவ பலத்தில் இல்லை; மாறாக, உலகத் தலைவர்கள் அச்சம், பெருமிதம் மற்றும் தவறான கணக்கீடுகளைத் தவிர்த்து, பேரழிவைத் தடுக்கும் விவேகத்தைக் கொண்டிருப்பதில்தான் தங்கியுள்ளது.

ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர்
14/05/2026
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்து உள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடத்திய மாநாட்டில் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியதாவது:மேற்கு ஆசிய நெருக்கடி நீடித்தால், இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் மோசமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை காலவரையின்றி மாற்றாமல் வைத்திருக்க அரசால் முடியாமல் போகலாம். மோதல் தொடர்வதால், கலால் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுசெய்து வருகின்றனர். இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.