Home செய்திகள்தமிழீழம்புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

by Amizhthu

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம்.

எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் என்பதுடன், இவ்விடயத்தில் ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் விசேடமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் கடந்த 23-02-2026ம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு காலநீடிப்பு செய்து நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறானதொரு பின்னணியில் திங்கட்கிழமை (03-03-2026) இடம்பெற்ற பேரவை அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அறிக்கை என்பன தொடர்பில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, உலகநாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டினார்.

அதன்படி இலங்கை தொடர்பில் பிரஸ்தாபித்த அவர், பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் ‘புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை பொதுமக்களின் கருத்தறிவதற்காக வெளியிடப்பட்டிருந்தமையை வரவேற்கிறோம். அதேவேளை புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும், இவ்விடயத்தில் ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை விசேடமாகக் கருத்திற்கொள்ளவேண்டும் எனவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்’ என்றும் குறிப்பிட்டார்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00