Monday, May 4, 2026

திமுக உறுப்பினர்களுக்கு பத்திரிகையாளர் அடையாள அட்டைகள்; அதிமுக புகார்

by Amizhthu
Stacks of gray plastic storage cases with latches and yellow notes, arranged on a surface at a community event, with people sitting at benches in the background.

‘ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு, பத்திரிகையாளர் என்ற பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என, அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், இது தொடர்பாக புகார் அளித்த பின், அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை கூறியதாவது:

ஓட்டு எண்ணிக்கை மையங்களில் செய்தி சேகரிக்க, தேர்தல் கமிஷன் வாயிலாக, பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான, கலெக்டர்கள் வாயிலாக, இவற்றை, செய்தி மக்கள் தொடர்பு துறையினர் தந்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் அல்லாத தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர்களுக்கும், இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. துாத்துக்குடி, காஞ்சிபுரம், சென்னை உட்பட பல மாவட்டங்களில், இதுபோன்று விதி மீறல் நடந்துள்ளது. இதற்கான ஆதாரம் உள்ளது.

தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதை, மக்களுக்கு தெரியப்படுத்த, ஓட்டு எண்ணிக்கை மையங்களில், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதை தவறாக பயன்படுத்தி, தி.மு.க.,வினர் செல்ல வழிவகுக்கப்பட்டு உள்ளது. இதனால், ஓட்டு எண்ணிக்கை மையங்களில் சலசலப்புகள் ஏற்படும்.

எனவே, தவறாக அடையாள அட்டை பெற்றவர்களை கண்டறிந்து, அவர்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இதற்கு காரணமான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00