Home தமிழகம்தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், பாமக, விசிக ஆதரவை முயற்சிக்கிறது!

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், பாமக, விசிக ஆதரவை முயற்சிக்கிறது!

by Amizhthu
Two men in white kurtas outdoors; left man seated with papers, right man with folded hands in prayer and a teal scarf, holding a red shawl cloth.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., 106 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

இதுகுறித்து, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக, த.வெ.க., உருவெடுத்திருப்பது மிகப்பெரிய வெற்றி. ஆனால், ஆட்சி அமைக்க போதுமான பலம் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கவே காங்கிரஸ் முயற்சி செய்தது.

அதற்கு தடையாக இருந்த தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, தோல்வி அடைந்து விட்டார். இந்நிலையில், விஜய்க்கு காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல் போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போதே, ஆட்சி அமைக்க உதவுமாறு, விஜய் கோரிக்கை வைத்தார். ஆனால், ‘தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும்’ என, ராகுல் சொல்லி இருக்கிறார்.

ஒருவேளை காங்., ஆதரவு கிடைத்தாலும், த.வெ.க.,வுக்கு ஆட்சி அமைப்பதற்கான முழு பலம் கிடைக்காது. எனவே, ஐந்து தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பா.ம.க.,விடம் பேச்சு நடத்தப்படுகிறது. விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணியுடன் நெருக்கமாக உள்ளார்.

அதன்படி, அவரிடம் த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்க, ஜான் கேட்டுள்ளார்; ஆனால், அன்புமணி இன்னும் தன் முடிவை அறிவிக்கவில்லை.

ஒருவேளை இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒருகட்சி வரவில்லை என்றால், கூடுதலாக கட்சிகளுடன் பேச்சு நடத்த வேண்டி உள்ளது. அதன்படிதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., வெங்கடேசன் வாயிலாக, அக்கட்சியுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் பேச்சு நடத்தப்படுகிறது.

அதேபோல், தி.மு.க., கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்டுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சு நடக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியிடமும் த.வெ.க., சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆதரவு கோரும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், ஜான் ஆரோக்கியசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில், இத்தனை சிறு கட்சிகளுடன் பேச்சு நடத்தினாலும், பெரும்பான்மைக்கு கூடுதலாக ஒரு இடமே கிடைக்கும் என்பதால், அ.தி.மு.க.,விடம் ஆதரவு கேட்டு பெறலாம் என்ற யோசனையையும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், அக்கட்சியின் தலைவர் விஜயிடம் முன் வைத்துள்ளனர்.

இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பிடம், த.வெ.க., தரப்பில் பேசத் துவங்கி உள்ளனர். ஒருவேளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அதற்கு ஒத்துவராத பட்சத்தில், அக்கட்சியை இரண்டாகப் பிளந்து, 24 அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெறும் மாஸ்டர் பிளான் திட்டமும் உள்ளது.

அக்கட்சியில் இருந்து வெளியேறி, த.வெ.க.,வில் முக்கிய தலைவராக இருக்கும் ஒருவர் வாயிலாக, இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு; மாமல்லபுரத்தில் தங்க ஏற்பாடுஆட்சி அமைக்க தேவையான முழு பலத்தை, த.வெ.க., பெறவில்லை. இதனால், வேறு சில கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், வெற்றி பெற்ற த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் சான்றிதழை பெற்று, சென்னையை அடுத்த, மாமல்லப்புரத்தில் உள்ள, ‘போர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன்’ ஹோட்டலுக்கு, இன்று மதியத்துக்குள் வர உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் விஜய் சந்திக்க உள்ளார். அதேநேரத்தில், ஆட்சி அமைக்கும் வரை, த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களை, அதே ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Reply