சென்னை ராயபுரம் தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வான விஜய் தாமு, தன் பிறந்த நாள் மற்றும் வெற்றி கொண்டாட்டத்தில், கேக்கை வாளால் வெட்டியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் விஜய் தாமு, 46; தீவிர விஜய் ரசிகர்; விஜய் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் மன்றத்தில், 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
விஜய் கட்சி ஆரம்பித்த பின், கட்சியின் மாவட்டச் செயலரானார். சட்டசபை தேர்தலில், சென்னை ராயபுரம் தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட்டார்.
அந்தத் தொகுதியில், ஐந்து முறை அமைச்சராக இருந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயகுமார் உள்ளிட்டோரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.
ராயபுரத்தில் நேற்று தன் பிறந்த நாள் மற்றும் தேர்தல் வெற்றியை கொண்டாடினார். இதில், அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலர் லயோலா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், விஜய் தாமு வாளால், ‘கேக்’ வெட்ட முயன்றார். அப்போது, அருகிலிருந்த லயோலா மணி, வாளால் கேக் வெட்ட வேண்டாம் என்று தடுத்தார். ஆனாலும், விஜய் தாமு வாளால் கேக்கை வெட்டிவிட்டு, வாளை துார வைத்தார். அதன்பின் சிறு கத்தியில், கேக்கை வெட்டி அருகிலிருந்தோருக்கு வழங்கினார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், ரவுடிகள், கஞ்சா போதை ஆசாமிகள், பொது இடங்களில் அரிவாளால், ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.
தற்போது ஆட்சி மாறிய நிலையில், அதே காட்சி தொடர்வது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாளால் கேக் வெட்டிய, எம்.எல்.ஏ., விஜய் தாமுக்கு, த.வெ.க.,வினரே அதிக அளவில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், த.வெ.க., கொடி கட்டிய ஆட்டோவில், மர்ம நபர்கள் சாகசம் செய்யும் வீடியோவும், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.