அமெரிக்காவின் மிருகத்தனமான அதிகாரப் போட்டிக்கு எதிராகப் பேசுவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை.

by
0 comments

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை எனவும் அவர்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

“வர்க்கத்திற்கு அதிகாரம் – அதிகாரத்திற்கு கட்சி” எனும் தொனிப்பொருளில் முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது இதில் தலைமையுரை ஆற்றும் போதே குமார் குணரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்;

இன்று இந்நாட்டை ஆட்சி செய்யும் ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை மிக மோசமான முறையில் மீறி வருகின்றது. வரலாற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு கட்சி இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அதனை விடவும் பாரதூரமான பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு எனும் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றது. இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக நின்றவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நவ தாராளவாதக் கொள்கைகளை எவ்வித தயக்கமுமின்றி அமுல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

banner

அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் மண்டியிட்டுள்ளது மாத்திரமன்றி மோடி மற்றும் ட்ரம்ப் போன்றோரின் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்காக முழு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது.

அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வெறியில் மத்திய கிழக்கைத் தாக்கி வருகின்றது. இஸ்ரேல் எனும் பொம்மை அரசை முன்னிறுத்தி காசா பகுதியில் பெரும் இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டது. வெனிசுலாவின் ஜனாதிபதி கடத்தப்பட்டமை மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களைக் குறிவைத்துள்ளமை என அமெரிக்கப் பேரரசுவாதம் தனது மனிதாபிமானமற்ற முகத்தைக் காட்டி நிற்கின்றது.

மத்திய கிழக்கில் நடக்கும் போர்களுக்குப் பின்னால் அமெரிக்க மூலதனத்தின் தேவைகளே ஒளிந்துள்ளன. உலகத் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டி இலாபம் ஈட்டிய பெரு மூலதன உரிமையாளர்கள் இன்று அதிகார போதையில் உள்ளனர். அமெரிக்காவின் இந்த பேரரசுவாத அதிகார வெறிக்கு எதிராக எமக்குள்ள ஒரே மாற்று வழி சோசலிசம் மாத்திரமேயாகும். சர்வதேச ரீதியிலான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் மூலமே இதனைத் தோற்கடிக்க முடியும். கியூபா இன்றும் மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது.

உலகில் சிறந்த கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ள கியூபா கொரோனா காலப்பகுதியில் பல நாடுகளுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கியது. பேரரசுவாத இருளுக்கு மத்தியில் கியூபா இன்றும் சிவப்புக்கொடியை ஏந்தி மனிதாபிமானத்தை உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

மாறி மாறி இந்நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று சிதைந்து போயுள்ளன. அந்தச் சிதைவுகளுக்குள் இனியும் மாற்றத்தைத் தேடுவது முட்டாள்தனமானது. ஜே.வி.பி அரசாங்கம் இன்று திருடர்களைப் பாதுகாக்கும் கொள்கையைப் பின்பற்றி வருகின்றது. இந்தியாவின் தேவைக்காக இந்நாட்டின் நிலங்கள் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் திட்டமிடுகின்றது.

எனவே முகங்களை மாற்றுவதால் அல்லது கட்சிகளை மாற்றுவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. உழைக்கும் வர்க்கத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஒரே தீர்வாகும். பேரரசுவாதம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு இந்நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00