வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி என்று அடிக்கடி கூறுவார் சீமான். அவருக்கு இந்த முறையும் பயிற்சி தான் என்று சொல்லி விட்டனர் மக்கள்.
தமிழகத்தின் 234 தொகுதியிலும் வேட்பாளர்கள்; அதுவும் பாதிக்குப் பாதி பெண்கள்; யாருடனும் கூட்டணி கிடையாது என்று திட்டமிட்டு தேர்தலை சந்தித்தார் சீமான். பல கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தும், ஆயிரம் கோடி ரூபாய் பணம் தருவதாக ஆசை காட்டியும் தான் கூட்டணிக்குப் போக வில்லை என்றும் அவ்வப்போது கூறினார் சீமான்.

தலைநகர் முதல் கன்னியாகுமரி வரை 234 தொகுதியிலும் தனி நபராக கூட்டம் போட்டு பிரசாரமும் செய்தார். ஆனாலும், அவருக்கு கடந்த லோக்சபா தேர்தலில் கிடைத்த 35 லட்சம் ஓட்டுகள் கூட, இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. அப்போது கிடைத்த 8 சதவீதம் ஓட்டுகளால் அவருக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைத்தது.
ஆனால், அடுத்த தேர்தலிலேயே அந்த ஓட்டு சதவீதம் அனைத்தும் மாயமாகி விட்டது. இந்த தேர்தலில் அவருக்கு 19 லட்சம் ஓட்டுகள், மொத்த ஓட்டுகளில் 4 சதவீதம் மட்டுமே இந்த தேர்தலில் கிடைத்துள்ளன.
சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் கூட அவருக்கு நான்காமிடமே கிடைத்துள்ளது; டிபாசிட் கூட பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ‘தனித்துப்போட்டி என்ற முடிவை மறு பரிசீலனை செய்தால் மட்டுமே அவருக்கு இனி அரசியல் எதிர்காலம்; இல்லையெனில் அடுத்த முறையும் பயிற்சி தான்’ என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.