வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில், சுங்க வரி செலுத்தப்படாமல் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான பொருட்கள் அடங்கிய கொள்கலன் பாரவூர்தி வாகனமொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் குளியாப்பிட்டிய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரம்பாவ பகுதியில், (14) ஞாயிற்றுக்கிழமை பகல் குளியாப்பிட்டிய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, சுங்க வரி செலுத்தாது சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்களுடன் கூடிய கொள்கலன் பாரவூர்திவாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் ஹொரம்பாவ பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த கொள்கலன் பாரவூர்தியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 190 மதுபானப் போத்தல்கள், மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்கள், 42 மோட்டார் சைக்கிள் செசி, 44 மோட்டார் சைக்கிள் எஞ்சின்கள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள், 6 போர்க்லிப்ட் இயந்திரங்கள், 3 எக்ஸ்காவேட்டர் இயந்திரங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் பெருமளவிலான வீட்டு உபயோகப் பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்கொள்கலன் பாரவூர்தியை முழுமையாக சோதனையிடுவதற்காக, குளியாப்பிட்டி வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உதவியாக குருணாகல் மற்றும் புத்தளம் விசேட அதிரடிப்படை முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.