”மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, கல்பாக்கத்தில் உள்ள வேக ஈனுலை அதன் செயல்பாட்டு நிலையை எட்டி சாதனை படைத்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், ‘மன் கீ பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், நேற்று ஒலிபரப்பான நிகழ்ச்சியின், 133வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை:
நாட்டின் வளர்ச்சி பாதையில் காற்றாலை மின்சாரம் தற்போது ஒரு புதிய கதையை எழுதி வருகிறது. நம் நாடு சமீபத்தில் இதில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி திறன் தற்போது 56 ஜிகாவாட்டை கடந்துள்ளது. உலகளவில் காற்றாலை மின் உற்பத்தியில், நம் நாடு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகம், குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இத்துறையில் முன்னிலை வகிக்கின்றன.
குறிப்பாக, கட்ச், பதான், பனஸ்காந்தா போன்ற ஒரு காலத்தில் தரிசாக கருதப்பட்ட பகுதிகள், இன்று எரிசக்தி மையங்களாக மாறி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக நடக்கும், ‘பீட்டிங் ரிட்ரீட்’ எனப்படும் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில், நம் நாட்டின் இசைக்கருவிகள் மற்றும் ராகங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த இசை இப்போது, ‘வேவ்ஸ்’ ஓ.டி.டி., தளத்தில் கிடைக்கிறது. தேசிய ஆவணக் காப்பகம் மூலம் 20 கோடிக்கும் அதிகமான வரலாற்று ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்போது டிஜிட்டல் முறையில் நடக்கிறது. இதில், நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
மக்கள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் அதிநவீன டிஜிட்டல் பாதுகாப்புடன் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். இதுவரை, 1.2 கோடி குடும்பங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்கள், ‘அஷ்டலட்சுமி’ போன்றவை அங்குள்ள மூங்கில் தொழிலுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் மூங்கில், ‘மரம்’ என வகைப்படுத்தப்பட்டு இருந்ததால், அதை கொண்டு செல்வதில் சிக்கல்கள் இருந்தன.
ஆனால், 2017-ல் நாங்கள் சட்டத்தை திருத்தி, மூங்கிலை ‘புல்’ வகையாக மாற்றியதால், இன்று இத்துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
ஒவ்வொரு இந்தியரும் வடகிழக்கு மாநிலங்களின் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மூங்கில் பொருளையாவது வாங்க வேண்டும் அல்லது அன்பளிப்பாக வழங்க வேண்டும்.
‘அமைதி நமக்குள் இருந்து தொடங்குகிறது’ என்ற கவுதம புத்தரின் போதனைகள், இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியம். – இவ்வாறு அவர் பேசினார்.
ஒரு வரலாற்று மைல்கல்’
நாட்டின் அணுசக்தி திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள, 500 மெகாவாட் திறனுள்ள வேக ஈனுலை, கடந்த 6ல், அதன் முதல் செயல்பாட்டு நிலையை வெற்றிகரமாக எட்டியது. இது குறித்து, மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், ”நம் அணுசக்தி விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். கல்பாக்கம் வேக ஈனுலை அதன் செயல்பாட்டு நிலையை எட்டியிருப்பது, நாட்டின் அணுசக்தி பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்,” என்றார். இந்த அணு உலை உள்நாட்டு தொழில்நுட்பத்தால் முற்றிலும் உருவாக்கப்பட்டது. கடந்த 2024 மார்ச்சில், இந்த உலையின் ‘கோர் லோடிங்’ நிகழ்வை நேரில் பார்த்த நினைவுகளை பிரதமர் மோடி பகிர்ந்ததோடு, இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
