கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளினால் கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 204,000 போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்குளி, ராஜவெல்ல மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 முதல் 43 வயதுக்குட்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, கொழும்பு கோட்டையின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது முதலாவது சந்தேகநபர் ஓல்காட் மாவத்தையில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்கு அருகில் வைத்து 6 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதுடன், இரண்டாவது சந்தேகநபர் மெலிபன் வீதி, கீர்த்தி லேன் பகுதியில் 6 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், மூன்றாவது சந்தேகநபர் முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் வைத்து 1 இலட்சத்து 80 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார். இதன்போது இவரிடமிருந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து ஈட்டியதாகக் கருதப்படும் 4 இலட்சம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அத்துடன் நான்காவது சந்தேகநபர் புறக்கோட்டை சிவப்புப் பள்ளிவாசலுக்கு அருகில் 12 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த பாரிய போதை மாத்திரை விநியோக பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
